அமலனாதிபிரான் - 6


அமலனாதிபிரான் - 6
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்*
அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை* முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.

[விளக்கம்]
அழகான சிறகுகளை உடைய வண்டுகள் வாழும் பொழில்களால் சூழப்பெற்ற அரங்கம்; அங்கு வாசம் செய்யும் ரங்கநாதன், முன்பொரு சமயம் சிவபெருமானின் துன்பத்தைப் போக்கினான். உலகங்கள், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் அந்த அரங்கனே ப்ரளய காலத்தில் அனைத்தையும் தன் கண்டம் வழியாக உள்ளே விழுங்கி விடுகிறான். அரங்கனின் அந்தக் கண்டம் கொண்டுள்ள அதிசயமான அழகைப் பாருங்கள் ! அந்த அழகு இன்று என்னை அடிமை செய்து (உலக சிற்றின்பங்களில் என் மனம் சிக்காமல்) என்னைக் காப்பாற்றியது.



[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]


[சொற்பொருள்]

அம் - அழகிய
சிறை - சிறகு; இறக்கை
(அம் + சிறை = )அஞ்சிறை - அழகிய சிறகு
மாநிலம் - பெரிய பூமி
அண்டர் அண்டம் - வானோர் உலகம்
பகிரண்டம் - வெளி உலகம் ("பஹிர் அண்டஹ" வடமொழி ஆக்கத்தில் பகிரண்டம் ஆயிற்று)
எழுமால் வரை - ஏழு பெரிய மலைகள்
கண்டம் - கழுத்து


[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]

அமலனாதிபிரான் - 5


அமலனாதிபிரான் - 5

பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

[விளக்கம்]
மிகப் பெரிய உக்கிரமான தவம் செய்தேனோ என்னவோ !! பலப் பிறவிகளாக சேர்த்து வைத்திருந்த, எனக்கு பெரும் சுமையாக இருந்த வினைகளை எல்லாம் இந்த அரங்கன் வேருடன் களைந்தான். அதோடு நில்லாமல் என்னை தனக்கு அன்பு செய்ய வைத்தான். அதோடும் நில்லாமல் என் உள்ளத்தினுள்ளும் புகுந்தான். இன்று தன் அழகை எல்லாம் நான் பருகுமாறு காட்சி அளிக்கிறான். மங்களகரமான ஆரம் திகழும் (சொற்களால் விவரிக்க முடியாத) அவனுடைய மார்பழகு என்னை அடிமை செய்ததே ! (அந்த அழகிற்கே ஆட்பட்டு நான் அடிமையானேன்.)

[சொற்பொருள்]
பாரம் - சுமை
பற்று - பிடிப்பு
பழவினை பற்றறுத்து - பழமையான வினைகளின் பிடிப்பினைக் களைந்து
வாரம் - அன்பு; பக்ஷபாதம்;உரிமை
ஆரம் - அணிகலன்; பூ மாலை; சந்தனக் குழம்பு


[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]




[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]




அமலனாதிபிரான் - 4



அமலனாதிபிரான் - 4
சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி* ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட மாமயில் ஆட அரங்கத்தம்மான்* திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

[விளக்கம்]
சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலைவனாக திகழ்ந்த ராவணன்; அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான். யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.

முன்னர் ராவணனை வீழ்த்திய அந்த ராமனே இந்த அரங்க மாநகரத்தின் ஸ்வாமியாக உள்ளான். இந்த அரங்க நகருள் வண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன. இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது. இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள ஆபரணம் ஒன்றே போதும் என் உயிரைக் கொள்ள (கொல்ல) !

(சொற்பொருள்)
ஓதம் - கடல்
ஓத வண்ணன் - கடல் நிறத்தன்
உதரம் - வயிறு
உதரபந்தம் - வயிற்றில் கட்டப் பெற்றிருக்கும் ஒருவகை அணிகலன்; அரைப் பட்டிகை;

[கூடுதல் விளக்கம்]


அமலனாதிபிரான் - 3


அமலனாதிபிரான் - 3

மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து
அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல்
அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !


[விளக்கம்]
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். முன்பு இவனுடைய அழகிய வயிற்றில் இருந்து 'படைக்கும் கடவுளான பிரமன்' படைக்கப் பெற்றான். இன்று அந்த எழில் வயிற்றில், செவ்வானம் போன்ற நிறத்து ஆடையை அணிந்து கொண்டு, என் இன்னுயிர் அரங்கன் திகழும் அழகே அழகு !! இந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போகிறதே !! (இந்த அழகிற்கே நான் அடிமையானேன்.)

(சொற்பொருள்)
அயன் - பிரம்மா
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்
அந்தி - செவ்வானம்
உந்தி - வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)

[கூடுதல் விளக்கம்]
(மந்தி பாய் வடவேங்கட மாமலை) - குரங்குகள் பாய்ந்து விளையாடும் பெருமை மிக்க திருவேங்கட மலை.

அமலனாதிபிரான் - 2



அமலனாதிபிரான் - 2
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரை*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே.

[விளக்கம்]
ஸ்ரீ ரங்கத்தின் தலைவன் பெருமைகள் பல. இவனே முன்பு திரிவிக்ரமனாக, மிக்க மகிழ்ச்சியுடன், விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உலகங்களை அளந்தான். இவனே ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன். அன்று தன்னை எதிர்த்து வந்த அரக்கர்களின் உயிரை கொடிய அம்புகளால் கவர்ந்த வீரன். இன்று எனது மனம், முன்பு ராமனாகவும் திரிவிக்ரமனாகவும் திகழ்ந்த பெருமை வாய்ந்த அரங்கனின் அழகில் மயங்குகிறதே! அரங்கனின் இடையில் பொருந்தி உள்ள சிவந்த ஆடையில் ரமிக்கின்றதே !!

(சொற்பொருள்)
உவந்த உள்ளம் - மகிழ்ச்சியுடன் கூடிய உள்ளம்
கடி - நறுமணம்
ஆர் - மிகுந்த
கடி ஆர் பொழில் அரங்கத்து அம்மான் - மணம் மிக்க பொழில்கள் உடைய அரங்கம்; அதனுடைய சுவாமி.
அண்டம் - வானம்
உற - அடைய; கிட்ட
நிவத்தல் - உயர்தல்; வளர்தல்
நீள் முடியன் - நீண்ட மணிமுடியை (கிரீடத்தை) உடையவன்.
நேர்ந்த - எதிர்த்த
நிசாசரர் - அரக்கர் (வடமொழியில்: நிஷா என்றால் இரவு; இரவில் சஞ்சரிப்பவர்)
கணை - பாணம்; அம்பு
வெங்கணை - கொடிய அம்பு
காகுத்தன் - ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன்.

[கூடுதல் விளக்கம்]
ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன், வனவாசம் செய்த காலத்தில், தண்டகாரண்யத்தில் காலம் கழித்த பொழுது அங்கு தவம் செய்து கொண்டு இருந்த முனிவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களின் உயிரை தன் கொடிய பாணங்களால் போக்கினான். பஞ்சவடியில் கர தூஷணர்களையும் அவர்களுடன் பல்லாயிரக் கணக்கான அரக்கர்களையும் தான் ஒருவனே நின்று முடித்தான். ரகுவீரன் பெருமைகள் சொல்லி முடியாது.

அமலனாதிபிரான் -1




அமலனாதிபிரான் - 1

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.

[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !

(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்

[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.

அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.

"நிமலன்......அரங்கத்தம்மான்" - வேங்கடநாதனின் பெருமை மொழிகள் அரங்கனுக்கும் பொருந்துகின்றன.

கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 12




பெரியாழ்வார் திருமொழி - 12

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் "நமோ நாராயணாய" என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.

[விளக்கம்]
பரிசுத்தமானவனும், பரமபதத்தில் உள்ளவனும், சார்ங்கம் என்னும் வில்லை உபயோகிப்பதில் திறமைசாலியும் ஆன ஸ்ரீமன் நாராயணனை குறித்து வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) பிரேமையுடன் பாடிய இந்த பல்லாண்டு பாசுரங்களின் சிறப்பு ஒப்பில்லாதது. இந்த பாசுரங்களை விருப்பத்துடன் மகிழ்ந்து உரைப்பவர்கள் என்ன பலனை பெறுவார்கள் என்றால், அவர்கள் பரமபத நாதனான ஸ்ரீ ஹரியை சூழ்ந்து இருந்து, "நமோ நாராயணாய" என்று கோஷித்துக் கொண்டு நித்ய இன்பம் எய்துவர்.


(சொற்பொருள்)
பவித்திரன் - தூய்மையானவன், மாசற்றவன்.
பரமேட்டி - பரம்பொருள், பரமபத நாதன்
சார்ங்கம் - திருமால் கையில் உள்ள வில்லின் பெயர்.