அமலனாதிபிரான் - 7

கையினார் சுரிசங்கனலாழியர் ! நீள்வரைபோல்
மெய்யனார் ! துளபவிரையார்கமழ் நீள்முடி எம்
ஐயனார் ! அணியரங்கனார் ! அரவினணைமிசை மேயமாயனார் !
செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

[விளக்கம்]

"ஐயோ ! இந்த அழகை எங்கனம் சொல்வேன்?  (ஆதிசேஷன் என்கிற) நாகத்தினை தனது படுக்கையாகக் கொண்டு ஒரு பெரிய மலை போல கண் வளர்கிறான் !  அழகான சங்கு சக்கரங்களை தன் கைகளில் தாங்கியுள்ளான் ! நீண்ட மணிமுடியில் துளசி மணம் நிறைந்து பரவுகிறதே ! இன்று என் சிந்தை மோசம் போனது ! பல மாய சாகசங்கள் செய்து, ஆதரத்துடன் தன் அடியாரை ஆட்கொள்ளும் என் ஐயன், அன்பே உருவான அரங்கன், இன்று தன் அதரங்களால்  என்னை ஆட்கொண்டானே !!"




[கூடுதல் விளக்கம்]


[சொற்பொருள்]

ஆர் - நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி - சுழி; துளை
ஆர் சுரி சங்கு - நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு - கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி - சக்கரம்
அனலாழி - தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை - மலை
மெய் - உடல்
துளபம் - துளசி
துளப விரை - துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் - துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி - அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு - நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை - மேல்; மேலிடம்
மேய்தல் - உறைதல்
செய்ய வாய் - சிவந்த வாய்


[ஒப்புநோக்கு]