அமலனாதிபிரான் - 6


அமலனாதிபிரான் - 6
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்*
அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலம் எழுமால் வரை* முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே.

[விளக்கம்]
அழகான சிறகுகளை உடைய வண்டுகள் வாழும் பொழில்களால் சூழப்பெற்ற அரங்கம்; அங்கு வாசம் செய்யும் ரங்கநாதன், முன்பொரு சமயம் சிவபெருமானின் துன்பத்தைப் போக்கினான். உலகங்கள், உயிர்கள் அனைத்தையும் படைக்கும் அந்த அரங்கனே ப்ரளய காலத்தில் அனைத்தையும் தன் கண்டம் வழியாக உள்ளே விழுங்கி விடுகிறான். அரங்கனின் அந்தக் கண்டம் கொண்டுள்ள அதிசயமான அழகைப் பாருங்கள் ! அந்த அழகு இன்று என்னை அடிமை செய்து (உலக சிற்றின்பங்களில் என் மனம் சிக்காமல்) என்னைக் காப்பாற்றியது.[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]


[சொற்பொருள்]

அம் - அழகிய
சிறை - சிறகு; இறக்கை
(அம் + சிறை = )அஞ்சிறை - அழகிய சிறகு
மாநிலம் - பெரிய பூமி
அண்டர் அண்டம் - வானோர் உலகம்
பகிரண்டம் - வெளி உலகம் ("பஹிர் அண்டஹ" வடமொழி ஆக்கத்தில் பகிரண்டம் ஆயிற்று)
எழுமால் வரை - ஏழு பெரிய மலைகள்
கண்டம் - கழுத்து


[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]

அமலனாதிபிரான் - 5


அமலனாதிபிரான் - 5

பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

[விளக்கம்]
மிகப் பெரிய உக்கிரமான தவம் செய்தேனோ என்னவோ !! பலப் பிறவிகளாக சேர்த்து வைத்திருந்த, எனக்கு பெரும் சுமையாக இருந்த வினைகளை எல்லாம் இந்த அரங்கன் வேருடன் களைந்தான். அதோடு நில்லாமல் என்னை தனக்கு அன்பு செய்ய வைத்தான். அதோடும் நில்லாமல் என் உள்ளத்தினுள்ளும் புகுந்தான். இன்று தன் அழகை எல்லாம் நான் பருகுமாறு காட்சி அளிக்கிறான். மங்களகரமான ஆரம் திகழும் (சொற்களால் விவரிக்க முடியாத) அவனுடைய மார்பழகு என்னை அடிமை செய்ததே ! (அந்த அழகிற்கே ஆட்பட்டு நான் அடிமையானேன்.)

[சொற்பொருள்]
பாரம் - சுமை
பற்று - பிடிப்பு
பழவினை பற்றறுத்து - பழமையான வினைகளின் பிடிப்பினைக் களைந்து
வாரம் - அன்பு; பக்ஷபாதம்;உரிமை
ஆரம் - அணிகலன்; பூ மாலை; சந்தனக் குழம்பு


[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]
[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]