கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 11



பெரியாழ்வார்
திருமொழி
- 11

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல்வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
லக்ஷ்மீநாதனே ! திருக்கோட்டியூர் நகரத்தின் தலைவனான செல்வ நம்பியை போல நானும் உனக்கு பழைமையான அடிமை கண்டாய் ! நல்ல முறையில்(உள்ளத்தில் அன்புடன்) நாராயண, கேசவ, மாதவ என்று உன்னுடைய நாமங்களை பரவி உனக்கு பல்லாண்டு பாடுவேன் !

(சொற்பொருள்)
அல்வழக்கு - தகுதியற்ற செயல்
துங்கன் - உயர்ந்தவன்.
பவித்திரன் - தூயவன்.

[கூடுதல் விளக்கம்]
எப்பொழுதும் உயர்ந்த செயல்களையே புரியும் சாது ஜனங்களால் பெருமை பெற்ற நகரம் திருக்கோட்டியூர். அதன் தலைவரான செல்வநம்பி திருமால் மீது உயர்ந்த பக்தி உடையவர்.
"நான் திருமாலின் அடிமை" என்ற அபிமானத்தினால் உயர்ந்தவர். அதனால் ஆழ்வார் அவரை "அபிமானதுங்கன்" என்று குறிப்பிடுகிறார்.





கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 10



பெரியாழ்வார்
திருமொழி - 10

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு
அடியோம் என்று எழுத்துப்பட்ட*
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுள்
சிலை குனித்து* ஐந்தலைய
பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

[விளக்கம்]
எங்கள் தெய்வமே ! உனக்கு நாங்கள் அடிமைகளாக என்று மாற்றம் அடைந்தோமோ அன்றே எங்கள் குடி நல்ல கதியை அடைந்தாகிவிட்டது. வடமதுராவில் ஒரு மங்களகரமான தினத்தில் அவதாரம் செய்தாய் ! பிருந்தாவனத்தில் காளியன் தலையில் நர்த்தனம் ஆடினாய் !
திவ்ய பூமியான மதுராவில் வில்லை முறித்தாய் ! உனக்கு பல்லாண்டு சொல்லக் கடவோம் !!

(சொற்பொருள்)
பைந்நாகம் - (காளியன் என்ற பெயர் பெற்ற) வலிமை பொருந்திய நாகம்.
சிலை - வில்
குனித்தல் - முறித்தல்

[கூடுதல் விளக்கம்]

"செந்நாள் தோற்றி" - மதுராவில் ஒரு அஷ்டமி தினத்தில் நடு இரவில் சிறைச்சாலையில் கிருஷ்ணாவதாரம் நிகழ்கிறது. கம்சனிடம் கொண்ட பயத்தினால் வசுதேவர் கிருஷ்ணனை தன்னுடைய நண்பரும் சகோதரரும் ஆன நந்தகோபருடைய வீட்டில் கிடத்துகிறார். நந்தருடைய வீட்டில் யசோதை செல்லமாக கோகுலத்திலும் பின்னர் பிருந்தாவனத்திலும் கண்ணன் பல விதமான லீலைகள் புரிந்த வண்ணம் வளர்கிறான்.

ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே - பிருந்தாவனத்தில் கண்ணன் நிகழ்த்திய காளிங்க நர்த்தனம் என்ற லீலையை நினைந்து பாடுகிறார்.

கண்ணனை மதுரைக்கு வரவழைத்து கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கம்சன் ஒரு சூழ்ச்சி செய்தான். தனுர் யாகம் என்றொரு யாகத்திற்கு ஏற்பாடு செய்தான். "தனுர் யாகத்தில் பலராமனும் கண்ணனும் பங்கு பெற வேண்டும்" என்று கபடமான அழைப்பினை விடுத்தான். அதனையும் ஏற்று பிருந்தாவனத்தில் இருந்து நந்தகோபன், ஆயர் குல பெரியோர், பலராமன் மற்றும் தன் நண்பர்கள் புடை சூழ கண்ணன் மதுரா நகரம் வந்தான். மதுராவில் கம்சனுடைய யாகசாலையை அடைந்த கண்ணன், மதுராவின் உண்மையான நாயகன் வந்து விட்டதை மதுரா ஜனங்கள் புரிந்து கொள்ளும் வகையிலும், தான் மதுரா வந்து விட்டதை கம்சனுக்கு அறிவிக்கும் முகமாகவும், வாயிலில் தொங்க விடப்பட்டு இருந்த பலம் பொருந்திய வில்லினை முறித்தான். அப்படி அவன் வில்லினை உடைத்தது பெருத்த இடி போன்றதோர் சப்தத்தை உண்டு பண்ணியது. அந்த இடி போன்ற நாதம் அதர்மத்திற்கு சாவுமணி அடிப்பது போன்று இருந்தது. இந்த லீலையை பல ஆழ்வார்களும் பாடி பரவசம் கொள்கிறார்கள்.