கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 9


பெரியாழ்வார்
திருமொழி - 9

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

[விளக்கம்]
உன்னுடைய அடியவர்களாகிய நாங்கள் உனக்கு படைக்கப்பட்டு மாறிய உணவையே உட்கொள்கிறோம். உனக்கு சாற்றிய துளசி மாலைகளையே விரும்பி வாங்கி அணிந்து கொள்கிறோம். திவ்யமான உன்னுடைய திருமேனியின் சம்பந்தம் பெற்ற ஆடைகளையே அணிந்து கொள்கிறோம். எங்கள் எஜமானனான நீ உன் அடியார்களான எங்களுக்கு இடும் வேலைகளை நன்றாக செய்து உன்னை மகிழ்விப்போம். பாற்கடலில் பாம்பணையில் அழகாக பள்ளி கொள்ளும் உனக்கு, சிறந்த இந்த திருவோண தினத்தில் பல்லாண்டு பாடுவோம்.

(சொற்பொருள்)
பீதக ஆடை - மஞ்சள் நிற ஆடை
துழாய் - துளசி
திருவோணம் - திருமாலுக்கு உகந்த நக்ஷத்திரம்.

[கூடுதல் விளக்கம்]
இன்றும் திருவல்லிக்கேணி போன்ற திருமால் ஆலயங்களில் பெருமாள் உடுத்தி இருந்த வேஷ்டி முதலிய வஸ்திரங்கள் அடியார்களுக்கு ஏலம் இடப்படுகின்றன.


கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 8


பெரியாழ்வார் திருமொழி - 8

நெய்யிடை நல்லதோர் சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல*
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே.

[விளக்கம்]
கருடனை கொடியாக உடையவனே! உண்பதற்கு ருசியான உணவு, உண்ட பின் தாம்பூலம், அணிய நல்ல அணிகலன்கள், உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம் என்று பல வகையிலும் எனக்கு அருள் புரிந்து என்னுடைய மனதையும் தூய்மை செய்யும் உனக்கு பல்லாண்டு கூறுவேன் !


[கூடுதல் விளக்கம்]
"கொடியோன்" என்பது கொடியை உடையவன் என்ற பொருள் தரும்.
கருடன் நாகர்களின் பகைவன். திருமால் தன்னுடைய உடலில் கருடனை ஒரு கொடியாக சுற்றி கொண்டு விளங்குகிறார். அதனால் "நாகப் பகை கொடியோன்" என்று அழைக்கப் பெறுகிறார்.

த்வாரகா நாதனான கிருஷ்ணனுடைய திவ்யமான தேரின் கொடியில் கருடச் சின்னம் பொறிக்கப் பெற்று இருக்கும். கருடனை தேர்க்கொடியாக உடைய கிருஷ்ணனுக்கு பாடிய பாசுரமாகவும் பொருள் கொள்ளலாம்.

பேரன்பு மயமான கிருஷ்ணன் தன்னுடைய பக்தர்களின் எல்லா விதமான தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்து தன்னை விட்டு அகலாத வண்ணம் பார்த்துக் கொள்கிறான் என்பது பாசுரத்தின் உட்குறிப்பு.


(சொற்பொருள்)
அடைக்காய் - பாக்கு; தாம்பூலம்;
நியதமும் - எப்பொழுதும்.
சேவகம் - ஊழியம்.
அத்தாணிச் சேவகம் - கொலு மண்டபத்தில் பெருமாள் வீற்றிருக்கும் வேலையில் அவருக்கு செய்யும் ஊழியம் (மாலை அணிவித்தல், சாமரம் வீசுவது முதலியன) ; நீங்காத பகவத் சேவை அல்லது அனுபவம் என்றும் பொருள் கொள்வர்.
மெய் - உடல்
மெய்யிட நல்லதோர் சாந்து - உடலில் பூசிக் கொள்ள வாசனை மிகுந்த சந்தனம்.
வெள்ளுயிர் - வெண்மையான உயிர்; உள்ளத்தூய்மை உடைய உயிர்




கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 7


பெரியாழ்வார் திருமொழி - 7

தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ் திருச்சக்கரத்தின்*
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப் பொருபடை வாணனை
ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.


[விளக்கம்]
வட்ட வடிவானதும், செம்மையான ஒளியுடன் சுடர் விட்டுக்கொண்டு நெருப்பை விட சிறப்பாக பொலிந்து மின்னுவதும், மங்கலமயமானதும் ஆன திருமாலின் சக்கரம், முன்பு ஒரு சமயம் பாணாசுரனின் மிகுதியான தோள்களை துணித்தது. சுதர்சனம் என்ற புகழ்ப்பெற்ற அந்த சக்கராயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவனான கிருஷ்ணனுக்கு, பக்தர்களாகிய நாம் பல்லாண்டு கூறுவோம் !!

[கூடுதல் விளக்கம்]
வாணன் என்கிற பாணாசுரன் ப்ரஹலாதனுடைய வம்சத்தில் பிறந்த அசுரன். ஆயிரம் கைகளை பெற்ற இந்த அசுரன், மாயப் போர் புரிவதில் தேர்ந்தவன். தன்னுடைய புஜ பராக்ரமத்தினால் யாவரையும் வென்று மிகுந்த செருக்கை அடைந்தான். அவனுடைய ஆணவத்தை அழிக்கும் பொருட்டு த்வாரகாவின் நாதனான கிருஷ்ணன் அவனுடன் போர் புரிந்து தன்னுடைய சக்கராயுதத்தினால் அதிகமான கைகளை துணித்தான். இவ்வாறு அசுரனை கொல்லாமல் அவனுடைய ஆணவத்தை மட்டும் கொன்று அருள் புரிந்த கிருஷ்ணனுக்கு ஆழ்வார் பல்லாண்டு பாட வேண்டுகிறார்.

இந்த பாசுரத்தில் "கோயிற் பொறி" என்பது சங்கு சக்கர சின்னம் இடும் சாதனத்தை குறிக்கும்.
மஹாவிஷ்ணுவின் அடியார்கள் தங்களுக்கு அவனை விட்டால் வேறு கதி இல்லை என்று
சரணாகதி செய்வர். அவ்வாறு சரணாகதி செய்து விட்டதற்கு அடையாளமாக தங்களுடைய கைகளில் சங்கு சக்கர குறியிட்டு கொள்வார்கள். இவ்வாறு அடையாளம் இட்டுக் கொண்டு வழி வழியாக பகவானுக்கு தொண்டு செய்யும் தொண்டர்கள் நாம் என்று ஆழ்வார் சொல்கிறார்.
(நாம் என்றுமே இறைவனிடம் நெருங்கிய தொடர்பை உடையவர்கள் என்பது குறிப்பு.)


(சொற்பொருள்)
ஆழி - வட்டம்; சக்கரம்
பொறி - குறியிடும் சாதனம்



கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 6


பெரியாழ்வார் திருமொழி - 6

எந்தை தந்தை தந்தை
தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரி உருவாகி
அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.

[விளக்கம்]
என்னுடைய தந்தை, பாட்டனார், அவருடைய பாட்டனார் என்று ஏழு தலைமுறைகளாக பகவானுக்கு சேவைசெய்கிறோம். திருவோண நக்ஷத்திரத்திலே நரஸிம்ஹனாக தோன்றி, பகைவனான இரண்யகசிபு என்கிற அசுரனைகொன்ற ஹரியின் களைப்பு தீர "பல்லாண்டு" பாடுங்கள் !

[கூடுதல் விளக்கம்]
பகவான் என்றும் பக்தர்கள் வசப்பட்டவன். அவர்களுடைய துன்பத்தை பொறுக்க முடியாதவன். இரண்யகசிபு பரம பாகவதனான ப்ரஹலாதனை பல விதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தியதால் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானான்.

ஆழ்வார் பகவான் மீது அளவற்ற அன்பை உடையவர் என்பதால் அசுரனை கொன்ற காரியம் பகவானுக்கு களைப்பை உண்டு பண்ணியதாக நினைத்து அந்த களைப்பு நீங்க "பல்லாண்டு" பாடுகிறார். நம்மையும் பாட தூண்டுகிறார்.

(சொற்பொருள்)
அம் - அழகிய
அந்தியம் போது - அழகிய மாலைப் பொழுது
பந்தனை - சோர்வு, ஆயாசம்
அரி - சிங்கம், எதிரி, குரங்கு என்று பல பொருள் கொண்ட பதம்.