கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 12
பெரியாழ்வார் திருமொழி - 12

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் "நமோ நாராயணாய" என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.

[விளக்கம்]
பரிசுத்தமானவனும், பரமபதத்தில் உள்ளவனும், சார்ங்கம் என்னும் வில்லை உபயோகிப்பதில் திறமைசாலியும் ஆன ஸ்ரீமன் நாராயணனை குறித்து வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) பிரேமையுடன் பாடிய இந்த பல்லாண்டு பாசுரங்களின் சிறப்பு ஒப்பில்லாதது. இந்த பாசுரங்களை விருப்பத்துடன் மகிழ்ந்து உரைப்பவர்கள் என்ன பலனை பெறுவார்கள் என்றால், அவர்கள் பரமபத நாதனான ஸ்ரீ ஹரியை சூழ்ந்து இருந்து, "நமோ நாராயணாய" என்று கோஷித்துக் கொண்டு நித்ய இன்பம் எய்துவர்.


(சொற்பொருள்)
பவித்திரன் - தூய்மையானவன், மாசற்றவன்.
பரமேட்டி - பரம்பொருள், பரமபத நாதன்
சார்ங்கம் - திருமால் கையில் உள்ள வில்லின் பெயர்.

1 comment:

THILAGA .I said...

ஒவ்வொரு பாடலும், விளக்கமும், பொருத்தமான ஒவியமும் அற்புதமாக இருக்கிறது.