
அமலனாதிபிரான் - 1
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !
(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்
[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.
அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.
விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.
நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.
"நிமலன்......அரங்கத்தம்மான்" - வேங்கடநாதனின் பெருமை மொழிகள் அரங்கனுக்கும் பொருந்துகின்றன.
8 comments:
எனக்கு மிகவும் பிடித்த பாசுரம் இது இராதா. அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்று நான்கு முறை சொன்னதையே சொல்கிறாரே என்று நானும் எண்ணினேன். நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை.
முனிவாகனருக்கு திருவரங்கத்தம்மானைப் பார்த்ததும் அவன் திருப்பெயரைச் சொல்வதற்கு முன்னர் திருவேங்கடவன் நினைவு வந்ததும் ஏன் என்று தெரியவில்லை.
குமரனுக்கு நல்வரவு ! நேற்று தான் உறையூர் சென்று வந்தேன். :-)
தங்கள் கேள்விகள் என்னை சிந்திக்க தூண்டுகின்றன. நான் இவ்வளவு எல்லாம்
யோசிக்கவில்லை. :-)
எனக்கு தெரிந்த சிலர் நாலாயிரத்தையே உயிராக கொண்டுள்ளவர். அவர்களிடம்
கேட்டு பார்க்கிறேன்.
அமலன் ஆதிப் பிரானுக்கு அடியேன் வாழ்த்தும் வணக்கமும் மாறா அன்பும், குற்றேவல் எங்களைக் கொள்ளமற் போகாது!
முன்பே கிடு கிடு-ன்னு படித்தாலும், சிவந்த ஆடையிலேயே பழியாய்க் கிடந்து, இப்போது தான் பின்னூட்டுகிறேன் ராதா! :)
//முனிவாகனருக்கு திருவரங்கத்தம்மானைப் பார்த்ததும் அவன் திருப்பெயரைச் சொல்வதற்கு முன்னர் திருவேங்கடவன் நினைவு வந்ததும் ஏன் என்று தெரியவில்லை//
ஹா ஹா ஹா
குமரன்,
இந்த கேஆரெஸ்-க்கு மட்டும் தான் திருவேங்கடமுடையான் மேல் ஓரவஞ்சனை-ன்னு அப்பப்ப சொல்வீங்க-ல்ல? பாருங்க, அந்தப் பாட்டினால் கண்டு வாழும் பாணருக்கும் தான்! :)
அரங்கன் என்று சொல்லும் முன்னால் வேங்கடவன் என்று ஏன் சொல்ல வேணும்?
ஏன்-ன்னா இந்தப் பாசுரம் திருவடிப் பாசுரம்! முதல் பாட்டே கமல பாதம் "வந்து" என் கண்ணினுள் ஒக்கின்றதே!
அவர் கண்கள் "போய்" திருவடியைப் பார்க்கவில்லையாம்! திருவடிகள் "வந்து" கண்ணில் ஒக்கின்றதாம்!
அரங்கனின் பள்ளிக்கட்டில் உள்ளே முதல் முறையாகப் போகிறார் பாணர்! அப்படிப் போன வினாடி, மனத்தில் ஆயிராமாயிரம் துடிப்புகள்! இது நாள் வரை காணாத அரங்கன்...எப்படி இருப்பானோ?
கோல மூக்கும் கொடி வாயும் நீல மேனியும்...ன்னு பலர் எவ்வளவோ சொல்லி இருந்தாலும்....
உள்ளே நுழைந்ததும், கண்ணில் பளீர் எனப் பாய்ந்து நின்றது திருவடிகளே!
இதோ பற்றக் கூடிய திருவடிகள்-ன்னு காட்டுபவன் வேங்கடவன் ஒருவனே!
அப்பற்றைப் பற்றினால், உலக சமுத்திரம் முழங்கால் ஆழம் தான் என்பதைக் காட்டுபவன்!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று நம்மாழ்வாரும் சரணாகதிப் பாசுரத்தை மட்டும் வேங்கடவன் திருவடிகளுக்கே ஆக்குகிறார்!
அரங்கனின் பாதுகா சஹஸ்ரத்தையே கூட பின்னாளில் தூப்புல் "திருவேங்கடமுடையானான" வேதாந்த தேசிகர் தான் செய்ய வேண்டி இருந்தது!
இப்படித் திருவடிகளைக் காட்டிக் கொடுப்பதால் தான்...
திருவடிகள் தாமே "வந்து" கண்ணில் ஒக்கின்றதால் தான்...
"என்னை ஆட்படுத்த விரையார் பொழில் வேங்கடவன்" என்று முதலில் சொல்லி...
"அரங்கத்தம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே" என்று பிறகு பாடுகிறார் திருப்பாணாழ்வார்!
ஹரி ஓம்!
நல்வரவு கே.ஆர்.எஸ் ! :-)
குமரன் கேட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்த எனக்கு உதவியாய் வந்தமைக்கு நன்றி. ஆனா அடுத்தடுத்த பின்னூட்டங்களில் நீங்களும் கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்களே! எனக்கு கேள்விகள் பிடிக்கும். ஆனா கேக்கறது நானா இருக்கணும். :-)
"அரங்கத்தம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே"
இதற்கு எனக்கு இன்னொரு அர்த்தம் தோன்றியது. ஆழ்வாருடைய கண்களில்(மனக்கண் என்று கூட வைத்து கொள்ளலாம்) அரங்கனின் பாதங்கள் முன்பே வாசம் செய்து வந்தன. அவர் நேரில் அரங்கனை கண்ட பொழுது "தன் கண்களில் உள்ள பாதங்கள் போல" ஒத்து இருப்பதாக இங்கு பாடுகிறார். :-)
கண்களில் பாதங்கள் வாசம் செய்யுமா என்றால் அடியார்கள் அது மாதிரி வரத்தை வேண்டுகிறார்கள்.
"என் கண்களில் வந்து வாசம் செய்" என்று மீராவும் பாடுகிறாள். (baso mere nainanamein nandhalaalaa...)
அலோ...
அடுத்த கேள்விக்கு ஆரு பதில் சொல்லுறதாம்? :)
அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்று நான்கு முறை சொன்னதையே சொல்கிறாரே? ஏன்? ஏன்? ஏன்? :)
ஒரிஜினல் மூலஸ்தான ஸ்ரீ அரங்கநாதர் படமா மேலிருப்பது
Post a Comment