அமலனாதிபிரான் - 4



அமலனாதிபிரான் - 4
சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி* ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட மாமயில் ஆட அரங்கத்தம்மான்* திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

[விளக்கம்]
சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலைவனாக திகழ்ந்த ராவணன்; அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான். யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன்.

முன்னர் ராவணனை வீழ்த்திய அந்த ராமனே இந்த அரங்க மாநகரத்தின் ஸ்வாமியாக உள்ளான். இந்த அரங்க நகருள் வண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன. இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது. இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள ஆபரணம் ஒன்றே போதும் என் உயிரைக் கொள்ள (கொல்ல) !

(சொற்பொருள்)
ஓதம் - கடல்
ஓத வண்ணன் - கடல் நிறத்தன்
உதரம் - வயிறு
உதரபந்தம் - வயிற்றில் கட்டப் பெற்றிருக்கும் ஒருவகை அணிகலன்; அரைப் பட்டிகை;

[கூடுதல் விளக்கம்]


17 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முன்னர் ராவணனை வீழ்த்திய அந்த ராமனே இந்த அரங்க மாநகரத்தின் ஸ்வாமியாக உள்ளான்//

ஆகா!
அந்த இராமனுக்கும் சுவாமி அல்லவா அரங்கநாதன்? அவன் வழிபட்ட சுவாமி தானே அரங்க விமான அரங்கநாதன்? நீங்க எப்படி எங்க அரங்கத்துக்கு இராமனை சுவாமி ஆக்கலாம்? :)

விட மாட்டோம்! விட மாட்டோம்! பெருமாள் வழிபட்ட பெரிய பெருமாள் தான் அரங்கத்தின் ஒரே தலைவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவனை சந்தோஷப்படுத்தும் விதமாக ஆடல் பாடல் காரியங்களை வண்டுகளும் மயில்களும் செய்கின்றன. மிகவும் இனிமையாக வண்டுகள் பாட, சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல நடனமாட, ரசிக சிரோன்மணியான ராமன் அவற்றை எல்லாம் "நன்று! நன்று !" என்று ரசித்துக் கொண்டு இருக்கிறான்//

ஹிஹி! இந்த விளக்கம் நல்லா இருக்கு! :)

மதுர-மா-வண்டு = சின்ன சின்ன வண்டு இல்ல!
மயில் ஆடணும்-ன்னா சின்ன வண்டு பாடினாப் போதுமா? ஏலுமா?
அதான் மதுர-மா-வண்டு! பெரிய வண்டு! பொறி வண்டு!

//சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன்//

சதுரம் என்றால் சாமார்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு!
சதுர மா மதிள் = சாமார்த்தியமா கட்டப்பட்ட மதில்கள்!

//இலங்கைக்கு இறைவன்//

இறைவன்-ன்னா தலைவன் தான்! ஆனால் எதுக்கு ராதா இராவணனைப் போய் "இறைவன்"-ன்னு ஒரு சிறப்புப் பெயர் கொடுத்துப் பாடணும்? தலைவன், அதிபன்-ன்னு பொதுவாப் பாடி இருக்கலாம் தானே? ஏன் இப்படி? கொஞ்சம் விளக்குங்களேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஓத வண்ணன்//

நல்ல அழகான தமிழ்ப் பெயர்! :)
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீர் ஓதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பார் ஓதம் மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்...
ன்னு ஓதம் ஓதம்-ன்னு அழகாப் பாடுவார் அப்பர் சுவாமிகள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அரங்கத்தம்மான்* திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே//

இந்த உதர பந்தம் தான் ஆண்டாளுக்குத் தன் காதலனான கண்ணன் = அரங்கனா? வேங்கடவனா? என்ற ஐயத்தைத் தீர்த்து வைத்தது! :)

நின்று உலாகின்றதே-ன்னு சொல்றாரு பாருங்க! அதாச்சும் உலாவும் போகிறது! நிக்கவும் நிற்கிறது!
* திரு வீதிப் புறப்பாட்டில் நம்பெருமாள் ஆங்காங்கு நிற்பதைப் போல்,
* மன வீதிப் புறப்பாட்டில் "நின்று உலாகின்றதே"! :)

பெரிய பெருமாள் திரு வயிற்றில் இன்றும்....இந்த உதர பந்தமான தாம்புக் கயிற்றின் தழும்பைக் காணலாம்!
யசோதை அன்று வயிற்றில் கட்டிய தாம்புக் கயிற்றின் தழும்பை ஆரத்தியின் போது இன்றும் சேவிக்கலாம்!

இராமவதாரக் காலத்துக்கும் முந்தைய அரங்க விமானத்து அரங்கன், கிருஷ்ணாவதாரத் தழும்பையும் ஏற்றுக் கொண்டான்!

தாமம் + உதரன் = தாமோதரன்! கயிற்றால் + வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்டவன்...
இன்று கயிற்றுக்குப் பதிலாக அட்டிகை கட்டி அழகு பார்க்கிறார்கள்! அதுவே உதர பந்தம்!

Radha said...

//நீங்க எப்படி எங்க அரங்கத்துக்கு இராமனை சுவாமி ஆக்கலாம்? :)//
ரவி, உனக்கு விஷயமே தெரியாதா !!
parallel universe அப்படின்னு ஒன்னு கேள்விபட்டதே இல்லையா? நம்ம பூலோகம் மாதிரி எத்தனையோ பூமி இருக்காம். ராமர் அவதாரம் முடிஞ்சி வைகுண்டம் போயிட்டே இருந்தாரா, அவருக்கு அனுமனை விட்டுட்டு போறோமேன்னு ஒரு வருத்தம் வந்துடுச்சி. அப்படியே மறுபடியும் பூமிக்கி இறங்கி வரார். ஆனா அவர் தப்பா வேற ஒரு பூமிக்கி இறங்கிடறார். அந்த பூமில அப்போ தான் எல்லாரும் ராமரை தேடிட்டு இருக்காங்க. என்ன விஷயம்னு பாத்தா அந்த பூமில இருந்த ராமர் லங்கா யுத்தம் முடிஞ்சி அயோத்யா போற வழியில காணாம போயிருக்காரு. அவர் ரொம்ப களைப்பா இருக்குன்னு ஸ்ரீரங்கத்துல வந்து படுத்துட்டாருன்னு மூணு பேருக்கு மட்டும் தான் தெரியும். இப்போ இந்த தப்பான பூமிக்கு இறங்கி வந்த ராமருக்கு, அனுமன் மட்டும் இல்ல சீதையும் இருக்கானு பார்த்து ரொம்ப சந்தோஷமாயிடிச்சி. ராமரை தேடிட்டு இருந்தவங்களுக்கும் சந்தோஷம். அப்படியே இங்கயே இவங்களோட கெளம்பி அயோத்யா போறாரு. :-)))
இதுக்கப்பறம் ஒங்களுக்கு தோன்ற கேள்விக்கு எல்லாம் பதில் கெடைக்கனும்னா நீங்க ஒவ்வொரு பூமிய சுத்தி யார் மொதல் ராமர்னு கண்டு பிடிக்கணும். :-)))
அது என்ன அவ்வளவு லேசு பட்ட காரியமா?? கல்ப கல்பமா பல பேர் முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஆனாலும் உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் !! ;-))

Radha said...

மதிள்களை சதுரமா கட்டின என்ன செவ்வகமா கட்டினா என்ன? சாமர்த்தியமா கட்டினா தான் என்ன?
பாசுரத்துல ஆழ்வார் ராமனை காட்டி கொடுத்தாலும் விடாம ராவணனையும் அவன் கட்டின மதில்களையும் ஆராய்ச்சி செய்யும் அகில இணைய உலக ஆய்வாளர்கள் சிங்கமே ! :-))
உன்னை மாதிரி ஆள் கிட்ட இருந்து அந்த நின்றவூர் என்னை பெத்த ஆத்தா தான் காப்பாத்தனும். :-)

Radha said...

//மதுர-மா-வண்டு = சின்ன சின்ன வண்டு இல்ல!
மதுர-மா-வண்டு! பெரிய வண்டு! பொறி வண்டு!
//
"வண்டுகள் இனிமையாக பாட" அப்படின்னு சொன்னா பெரிய வண்டுகள் பாடலேன்னு பொருள் கொள்ளக் கூடாது. :-))
சின்ன வண்டுகளும் பகவானை கொண்டாடிட்டு போகட்டுமேபா !! அவை பாடறது அரங்கனுக்கு நிச்சயமா கேக்கும். :-))

Radha said...

//ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீர் ஓதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பார் ஓதம் மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்...
ன்னு ஓதம் ஓதம்-ன்னு அழகாப் பாடுவார் அப்பர் சுவாமிகள்! //
நன்றி ! :-))
i am reminded of thirumangai's
"சிலை இலங்கு பொன்னாழி ...என்கின்றாளால்" on the lord of thirukkannapuram.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
ரவி, உனக்கு விஷயமே தெரியாதா !!
parallel universe அப்படின்னு ஒன்னு கேள்விபட்டதே இல்லையா?//

ஓ...அப்படியெல்லாம் வேற இருக்கா ராதா...? சொல்லுங்க சொல்லுங்க! நீங்க சொன்னா நான் கேட்டுக்கப் போறேன்! :)

அடியேன் பொடியேனுக்கு parallel universe எல்லாம் தெரியாதே! எனக்குத் தெரிஞ்சது எங்கூருல இருக்கிற கோகுலம் மட்டும் தான்! அங்கிட்டு எங்க பய புள்ள கண்ணன் எப்பவும் இருப்பான், துவாரகைக்கு ராஜாவாப் போன பிற்பாடு கூட! :)

//கல்ப கல்பமா பல பேர் முயற்சி செஞ்சிட்டு இருக்காங்க. ஆனாலும் உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் !! ;-))//

ஹிஹி! முயற்சியா? அதெல்லாம் நாங்க பண்றதில்லைங்கோ! அவன் தான் எங்க கிட்ட வர முயற்சி பண்ணுவான்! :)

//அயோத்யா போற வழியில காணாம போயிருக்காரு. அவர் ரொம்ப களைப்பா இருக்குன்னு ஸ்ரீரங்கத்துல வந்து படுத்துட்டாருன்னு //

ஹிஹி!
அவரு எங்கே வந்து படுத்தாலும், எல்லா parallel universe-இலும், அனுமன் அனுமன் தான், சீதை சீதை தான், இராமன் வழிபட்ட பெரிய பெருமாள் பெரிய பெருமாள் தான்! ஸோ, ரங்க விமானத்தில் படுத்தது பெரிய பெருமாள் தான்! :)

இந்த ராமரு, சைட்-ல எங்காச்சும், காவரிக் கரையோரமா, மரத்து கீழ வேணும்னா படுத்து இருப்பாரு! ஏன்னா அயோத்தி திரும்பும் வரை, எந்த ஊருக்குள்ளும், மாளிகைக்குள்ளும் கால் வைக்க மாட்டேன்-ன்னு வாக்கு கொடுத்திருக்காராம், எல்லா parallel universe-லயும்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாசுரத்துல ஆழ்வார் ராமனை காட்டி கொடுத்தாலும் விடாம ராவணனையும் அவன் கட்டின மதில்களையும் ஆராய்ச்சி செய்யும் அகில இணைய உலக ஆய்வாளர்கள் சிங்கமே ! :-))//

ஹிஹி!
ஆழ்வார் இராவணனை முதலில் சொல்லி அப்பறமாத் தான் இராமனையே சொல்றாரு! :)
இதுல ஆராய்ச்சி எல்லாம் ஒன்னுமே இல்லை! பாட்டைப் பார்த்தாலே தெரியுதே! :)

//உன்னை மாதிரி ஆள் கிட்ட இருந்து அந்த நின்றவூர் என்னை பெத்த ஆத்தா தான் காப்பாத்தனும். :-)//

காப்பாத்து ஆத்தா, காப்பாத்து! உன் ஆசைப் பையன் எனக்காகவாச்சும் என் நண்பர் ராதாவைக் காப்பாத்து ஆத்தா, காப்பாத்து! :)
ராதாக்காக இல்லீனாலும், நம்ம கிரிதாரி சந்தோசமா இருக்கணும்-ல்ல? அதுக்காகத் தான் கேக்குறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சின்ன வண்டுகளும் பகவானை கொண்டாடிட்டு போகட்டுமேபா !! அவை பாடறது அரங்கனுக்கு நிச்சயமா கேக்கும். :-))//

ஹிஹி! கட்டாயமா! என்னையப் போல சின்ன வ(வா)ண்டுங்க பாடுறது தான் அரங்கனுக்கு இன்னும் உகப்பு! :)

ஆனா சிறுசுங்க பாடினா அரங்கனுக்கு கேட்கும், ஆனா ராதா போல பெரிய மயிலுக்கு கேட்க மாட்டேங்குதே!
மயிலுக்கு கேட்கணும்-ன்னா, அதன் சைசுக்கு ஈடு கொடுக்கும் பெரிய வண்டுங்க பாடினாத் தான் காதுலயே விழுது! பாவம் சின்ன வண்டுங்க! :)

மயிலே மயிலே, சின்ன வண்டுங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க மயிலே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//i am reminded of thirumangai's
"சிலை இலங்கு பொன்னாழி ...என்கின்றாளால்" on the lord of thirukkannapuram//

ஜூப்பரு! :)
முழுப் பாசுரமும் கொடுங்களேன்! கொறைஞ்சாப் போயிருவீங்க? :)

Radha said...

//அயோத்தி திரும்பும் வரை, எந்த ஊருக்குள்ளும், மாளிகைக்குள்ளும் கால் வைக்க மாட்டேன்-ன்னு வாக்கு கொடுத்திருக்காராம் //
ஹ ஹா ஹா ஹா ஹா !! :-)))
ராமர் ஸ்ரீ ரங்கத்துல வந்து படுத்தப்போ அது சோலைகள் நெறஞ்ச காடா இருந்துது கண்ணா ! அது நகரமும் கெடயாது. அங்க மாளிகைகளும் கெடயாது. கதைய நான் முழுசா சொல்லி முடிக்கவே இல்ல....
கீழே தொடருது பாரு. :-)

Radha said...

ஆனானப்பட்ட ராமர் இப்படி தனியா வந்து படுத்து கிடக்கறாரேன்னு இந்த பிரம்மா என்ன பண்ணாரு தெரியுமா, பிஸ்தான ஆள் எல்லாம் ஏற்பாடு பண்ணி அவரை சுத்தி மாளிகை எல்லாம் கட்ட ஏற்பாடு பண்றார். திடீர்ன்னு நிறைய ஆளுங்களோட நடமாட்டம், சத்தம் எல்லாம் கேட்டு, ராமர் கண் விழிச்சி பார்த்து "யாரை கேட்டு இந்த மாதிரி எல்லாம் செய்ய ஆரம்பிச்சி இருக்கேன்னு" பிரம்மாவை கேள்வி மேல கேள்வி கேக்க, பிரம்மா பயந்து போயி ராமர் கால்ல விழுந்து நடந்த கதை எல்லாம் சொன்னாரு. இனிமே நமக்கு இங்க வேலை இல்லை (அதான் தனக்கு பத்தி இன்னொரு ராமர் வந்தாச்சே!!) அப்படின்னு (ஸ்ரீரங்கத்து) ராமரும் யோசிக்கறார்.
கதை தொடரும் ...

Radha said...

"இப்போ என்ன செய்யலாம்? அவதார வேலை முடிஞ்சா மாதிரி ஆயிடிச்சே ! அந்த ராமனுக்கு பதில் நான் வைகுண்டம் போயிடவா?" அப்படின்னு ஸ்ரீரங்கத்து ராமர் பிரம்மாவை கேட்க, பிரம்மா, "அவதார காரியம் முடிஞ்சா என்ன? உடனே வைகுண்டம் போயிடனுமா? நீங்க எங்க வீட்டுக்கு வரணும் !!" அப்படின்னு தன்னோட லோகத்துக்கு வர அழைப்பு விடறார். உடனே ஸ்ரீரங்க விமானம்னு அங்கேயே ஒரு விமானம் செய்ய ஏற்பாடு பண்றார். அதுல ராமரை அழகா எழ பண்ணி சத்ய லோகத்துக்கு கொண்டுட்டு போயிடறார். அங்க பிரம்மா நிறையா காலம் இந்த ராமருக்கு பூஜை பண்ணி, பின்னாடி இன்னொரு கல்பத்துல முதல் முதலா வர்ற சதுர்யுகத்துல இஷ்வாகு குலத்துல ஒரு ராஜாவுக்கு கொடுக்கறார். இப்படி வந்த இஷ்வாகு குல தனத்தை தான், விசாலாக்ஷியான சீதையோட கூடி அந்த கல்பம் பூரா எடுக்கற அவதாரத்துல எல்லாம் ராமர் வழிபடறார். :-)))
ஹ ஹா ஹா ஹா ஹா !! :-)))

Radha said...

//மயிலே மயிலே, சின்ன வண்டுங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க மயிலே! :)) //
அட இன்னும் புரியலையா ? "மா" என்ற ஓரெழுத்து ஒருமொழியை "து", "தூ" மாதிரி ஈசியா நினைச்சுக்க முடியாது. :-) "மா" என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு, "பெருமை", "சிறப்பு", "மாமரம்", "யானை", "குதிரை" , "திருமகள்"...எத்தனையோ பொருள் இருக்கே கண்ணா? ஒரு அசைச்சொல்லாக கூட வரும். இதுல "பெரிய" என்பதை எடுத்துக் கொண்டால் சிறிய வண்டுகளின் சந்தோஷத்தை பறிக்க வேண்டி வருமேன்னு அந்த பொருள் இங்கு கொள்ளப்படவில்லை. :-)
பெரிய வண்டுகள் பாடலைன்னு இல்ல. எல்லாமும் தான் பாடுது. பகவானை கொண்டாடற வண்டுகள், சிறந்த வண்டுகள், இனிமையா பாடுது. பெருசு பாடறது மயில்களுக்கு கேக்கும். சின்னது பாடறது மயில்களுக்கு கேக்காட்டியும் அரங்கனுக்கு கேக்கும். :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்படி வந்த இஷ்வாகு குல தனத்தை தான், விசாலாக்ஷியான சீதையோட கூடி அந்த கல்பம் பூரா எடுக்கற அவதாரத்துல எல்லாம் ராமர் வழிபடறார். :-)))
ஹ ஹா ஹா ஹா ஹா !! :-)))//

யம்மாடியோவ்!
டகால்ட்டி ராதா திருவடிகளே சரணம்! :)
ஸ்பின் டாக்டர் ராதா திருவடிகளே சரணம்! :)
பேரலல் யூனிவர்ஸ் இராகவப் பெருமாள் திருவடிகளே சரணம்!