அமலனாதிபிரான் - 2அமலனாதிபிரான் - 2
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரை*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின்மேல் சென்றதாம் என் சிந்தனையே.

[விளக்கம்]
ஸ்ரீ ரங்கத்தின் தலைவன் பெருமைகள் பல. இவனே முன்பு திரிவிக்ரமனாக, மிக்க மகிழ்ச்சியுடன், விண்ணை முட்டும் அளவு உயர்ந்து உலகங்களை அளந்தான். இவனே ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன். அன்று தன்னை எதிர்த்து வந்த அரக்கர்களின் உயிரை கொடிய அம்புகளால் கவர்ந்த வீரன். இன்று எனது மனம், முன்பு ராமனாகவும் திரிவிக்ரமனாகவும் திகழ்ந்த பெருமை வாய்ந்த அரங்கனின் அழகில் மயங்குகிறதே! அரங்கனின் இடையில் பொருந்தி உள்ள சிவந்த ஆடையில் ரமிக்கின்றதே !!

(சொற்பொருள்)
உவந்த உள்ளம் - மகிழ்ச்சியுடன் கூடிய உள்ளம்
கடி - நறுமணம்
ஆர் - மிகுந்த
கடி ஆர் பொழில் அரங்கத்து அம்மான் - மணம் மிக்க பொழில்கள் உடைய அரங்கம்; அதனுடைய சுவாமி.
அண்டம் - வானம்
உற - அடைய; கிட்ட
நிவத்தல் - உயர்தல்; வளர்தல்
நீள் முடியன் - நீண்ட மணிமுடியை (கிரீடத்தை) உடையவன்.
நேர்ந்த - எதிர்த்த
நிசாசரர் - அரக்கர் (வடமொழியில்: நிஷா என்றால் இரவு; இரவில் சஞ்சரிப்பவர்)
கணை - பாணம்; அம்பு
வெங்கணை - கொடிய அம்பு
காகுத்தன் - ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன்.

[கூடுதல் விளக்கம்]
ககுத்த வம்சத்தில் பிறந்த ராமன், வனவாசம் செய்த காலத்தில், தண்டகாரண்யத்தில் காலம் கழித்த பொழுது அங்கு தவம் செய்து கொண்டு இருந்த முனிவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களின் உயிரை தன் கொடிய பாணங்களால் போக்கினான். பஞ்சவடியில் கர தூஷணர்களையும் அவர்களுடன் பல்லாயிரக் கணக்கான அரக்கர்களையும் தான் ஒருவனே நின்று முடித்தான். ரகுவீரன் பெருமைகள் சொல்லி முடியாது.

9 comments:

குமரன் (Kumaran) said...

இந்தப் பாசுரத்தில் விபவத்தைக் கூறியதைப் பார்க்கும் போது சென்ற பாசுரத்தில் அர்ச்சைக்கு எடுத்துக்காட்டாக வேங்கடவனைக் கூறினாரோ என்று தோன்றுகிறது.

Radha said...

ஸ்ரீ நிவாசன் உமது இஷ்ட தெய்வமா ? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அரங்கன் இடுப்பில் சிவப்புத் துண்டா? மஞ்சள் நிற பீதாம்பரம் இல்லையா? விளக்குங்கள் ராதா விளக்குங்க :))

Radha said...

இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு தான் ஒரு படத்தை கஷ்டப்பட்டு தேடி பிடிச்சி போட்டேன். :)
படத்தை பாருங்க மஞ்சள் நிற ஆடையும் உள்ளது. :) இடையில் அந்த பீதாம்பரத்தை சுற்றி ஒரு சிவந்த வஸ்திரமும் உள்ளது. :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Radha said...
இது மாதிரி கேள்வி கேக்கறவங்களுக்கு தான் ஒரு படத்தை கஷ்டப்பட்டு தேடி பிடிச்சி போட்டேன். :)//

தோடா! படமெல்லாம் தரவாகாது! பாசுரம் தான் தரவு!
தரவு ராதா! தரவு தரவு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வணக்கம் ராதா! :)

//அரங்கன் இடுப்பில் சிவப்புத் துண்டா? மஞ்சள் நிற பீதாம்பரம் இல்லையா?//

பீத + அம்பரம் = மஞ்சள் ஆடை!
இது வேட்டி போல! இதையும் ஐயா ஜம்முனு கட்டி இருக்காரு!

சிவந்த ஆடை = எங்கே?
"அரைச்" சிவந்த ஆடை! இடையில் சிவந்த ஆடை!

இதுக்குப் பேரு திருப்பரிவட்டம்! இடுப்பில் கட்டிக் கொள்ளும் கச்சை! இதையும் ஐயா இறுக்கிக் கட்டி இருக்காரு! டு பீஸ் வேட்டி-ன்னு வச்சிக்குங்களேன்! :)
அதான் கேட்டிருந்தேன்! நீங்க படத்திலும் கொடுத்து இருக்கீக! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சரி, எதுக்கு இன்னிக்கி இங்கே எட்டிப் பார்த்தேன்-னா.....
இப்ப தான் பிரேசிலில் இருந்து நியூயார்க் வந்து சேர்ந்தேன்! வரும் வழியெல்லாம் இந்தப் பதிவு ஞாபகம் தான்! :))

அட, ஐ மீன், நம்ம அமலனாதி ஞாபகம்-ங்க!
என்னமோ தெரியலை, ரொம்ப ஏக்கம்! யாரையோ பார்க்கணும் போலவே இருந்திச்சி! அதான் ஃபிளைட் முழுக்க மனசுக்குள்ளாற இந்தப் பாசுரத்தை ஓட்டிக்கிட்டே வந்தேன்! :)

அப்போ திடீர்-ன்னு ஒரு யோசனை!

சென்ற பாசுரத்தில் கமல பாதம் "வந்து" என்கிறார்!
இந்தப் பாசுரத்திலோ சிவந்த ஆடை மேல் "சென்று" என்கிறார்!

ஏன் இப்படி? மொதல்ல அவர் வந்தாரு-ன்னு சொன்னவர், இப்போ தான் சென்றேன்-ன்னு சொல்றாரே? ஏன்??? எது உண்மை? அவர் வந்தாரா? இல்லை இவர் சென்றாரா??

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இறையன்பு என்பது...
உள்ளத்தில் முதல் முறை மின்னல் என எப்போது தோன்றியது-ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா?

ஏதோ, நாமே, நம் முயற்சியால் பெரிய பக்தன் ஆனோம் என்று ஒருவராச்சும் சொல்ல முடியுமா?

மனதில் பூக்கும் இறையன்பு, நாம் நினைத்து, நம் முயற்சியால் வருவதில்லை! அவனால் தான் உள்ளத்தில் அந்தக் காதல் முகிழ்க்கிறது!

கொள்வது அவன்! கொண்டவன்!
கொண்ட பின், செல்வது நாம்!

அதான் முதல் பாசுரத்தில்...கமல பாதம் "வந்தது" என்கிறார்!
அடுத்த பாசுரத்தில்...சிவந்த மேல் "சென்றது" என்கிறார்!

அவன் வந்தான்!
நான் சென்றேன்!

கமல பாதம் "வந்து" என் கண்ணினுளன ஒக்கின்றதே!
சிவந்த ஆடையின் மேல், "சென்றதாம்" என் சிந்தனையே!

அவன் என்னிடம் வந்தான்!
நான் அவன் பின் சென்றேன்!

ஷைலஜா said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இறையன்பு என்பது...
உள்ளத்தில் முதல் முறை மின்னல் என எப்போது தோன்றியது-ன்னு யாராச்சும் சொல்ல முடியுமா?>>>>>>>>

மின்னல் என வர சாத்தியம் இல்லை. மெல்ல மெல்ல வித்துமுளைக்கும் தன்மையதாய் இருக்கவேண்டும் அந்த வித்தினையும் அவன் தான் நம் மனத்தில் பதிக்கவேண்டும்!அப்படிப்பட்டதே விருட்சமாகிறது என தோன்றுகிறது!

//ஏதோ, நாமே, நம் முயற்சியால் பெரிய பக்தன் ஆனோம் என்று ஒருவராச்சும் சொல்ல முடியுமா? //

முடியவே முடியாதே.

//மனதில் பூக்கும் இறையன்பு, நாம் நினைத்து, நம் முயற்சியால் வருவதில்லை! அவனால் தான் உள்ளத்தில் அந்தக் காதல் முகிழ்க்கிறது!

கொள்வது அவன்! கொண்டவன்!
கொண்ட பின், செல்வது நாம்!

அதான் முதல் பாசுரத்தில்...கமல பாதம் "வந்தது" என்கிறார்!
அடுத்த பாசுரத்தில்...சிவந்த மேல் "சென்றது" என்கிறார்!?//

?>>>>>>>

அழைத்தவன் அவன் தான் அதனால் சென்றவர் இவரே!

//அவன் வந்தான்!
நான் சென்றேன்!

கமல பாதம் "வந்து" என் கண்ணினுளன ஒக்கின்றதே!
சிவந்த ஆடையின் மேல், "சென்றதாம்" என் சிந்தனையே!

அவன் என்னிடம் வந்தான்!
நான் அவன் பின் சென்றேன்!//

ஆமாம் எதிர்கொண்டானே என் அரங்கன்! சென்றால் மீள இயலாத சிந்தனையைப்பெற்றார் அமலனாதிபிரான்! அருமையான கோணம் நீங்கள் சிந்தித்ததும், ரவி!

February 16, 2010 6:11 PM
/////