கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 5பெரியாழ்வார் திருமொழி - 5

அண்டக்குலத்துக்கு அதிபதியாகி
அசுரர் இராக்கதரை*
இண்டக்குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகேசன் தனக்கு*
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.


[விளக்கம்]
(பகவானின்) தொண்டர் கூட்டத்தில் உள்ளவர்களே ! வாருங்கள் !!
எல்லா உலகங்களுக்கும் தலைவானாகவும், சக உயிர்களுக்கு தீமை புரியும் அசுர ராக்ஷச கூட்டத்தை வேருடன் களைந்து அனைவருக்கும் பாதுகாவலானாகவும், முற்றும் துறந்த முனிவர்கள் வணங்கும் தெய்வமாகவும் விளங்கும் ஹ்ருஷீகேசனை போற்றுவோம். அவனுடைய அடி தொழுது, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு மதுசூதனா, திருவிக்ரம, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா என்று அவனுடைய நாமங்களை பாடி பரவுவோம். பொறுமையுடன் ஆயிர நாமங்களையும் உளம் குளிர சொல்லுவோம்.

(சொற்பொருள்)
குலம் - 1. கூட்டம், குழு; 2. இனம்
அண்டம் - உலகம்
அண்டக்குலம் - பல்வேறு உலகங்களின் கூட்டம்.
இராக்கதர் - இராக்ஷசர்கள்.
இண்டர் - கொலை முதலிய இழிவான செயல்களை புரிபவர். (கொலைஞர்)
இண்டக்குலம் - கொலைஞர் கூட்டம்.
இருடி - புலன்களை அடக்கிய முனிவர்.
இருடீகேசன் - முனிவர்களுக்கு எல்லாம் தலைவன். (ஹ்ருஷீகேசன்) (புலன்களுக்கு தலைவன் என்றும் பொருள் படும்.)
ஆயிர நாமம் - விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

No comments: