கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 2
பெரியாழ்வார் திருமொழி - 2

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு*
படை போர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.


[விளக்கம்]
(கிருஷ்ணா!) நீயும் உன் பக்தர்களும் என்றும் கூடியே இருக்க வாழ்த்துக்கள்! உனது வலது மார்பினில் அழகாய் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு ஒரு குறைவும் ஏற்படாதிருக்க வாழ்த்துக்கள் ! அழகிய வடிவுடன் சுடர் விட்டு ப்ரகாசிக்கும் உனது வலது கை சக்கரத்திற்கும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் ! போர் களத்தில் ஆயுதமாய் புகுந்து எதிரிகளை நடுங்க செய்யும் பாஞ்சஜன்யம் என்கின்ற உனது சங்கும் என்றும் ஒரு குறைவும் இன்றி இருக்க வாழ்த்துக்கள் !

(சொற்பொருள்)
படை - ஆயுதம்
புக்கு - புகுந்து
ஆழி - சக்கரம்
ஆர் - கூர்மை; அழகு
வடிவார் சோதி - வடிவு + ஆர் + சோதி

[கூடுதல் விளக்கம்]
அடியார்கள் - பக்தர்கள்; இறைவனை தங்கள் அன்பினால் கட்டுபவர்கள்; மிகுந்த அன்புடன் பகவானுக்கு தொண்டு செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள்; எப்பொழுதும் பகவான் அருகிலேயே இருக்கும் விருப்பம் உடையவர்கள்.

பாஞ்சஜன்யத்தின் மகிமை:
மகாபாரத யுத்தத்தில் கண்ணன் தன்னுடைய பாஞ்சசன்னியத்தை எடுத்து கம்பீரமாக முழங்க, அந்த இடி போன்ற முழக்கத்தை கேட்டே கௌரவ சேனையினர் துணிவை இழந்து மனச்சோர்வை எய்தினர்.

பெரியாழ்வார் பகவத் தரிசனம் பெற்ற சமயத்தில் இந்த "பல்லாண்டு" பாசுரங்களை பாடுகிறார். சங்கு சக்கரத்துடன் பிராட்டியுடன் கூடிய பெருமானை தரிசனம் செய்த பெரியாழ்வாரின் கண்ணும் மனமும் களிக்கின்றன. அந்த அனுபவம் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் தொனிக்க பாடுகிறார்.


No comments: