கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 1



பெரியாழ்வார் திருமொழி - 1

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு.


[விளக்கம்]
மல்லர்களை அடக்கி ஆண்ட திடமான தோள்களை உடைய கிருஷ்ணா ! உன் சிவந்த பாதங்களின் அழகுக்கு என்றென்றும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் !!

[கூடுதல் விளக்கம்]
ஒரே சமயத்தில் கண்ணன் திண்மையான தோள்களை உடையவனாகவும், மென்மையான பாதங்களை உடையவனாகவும் பெரியாழ்வாருக்கு காட்சி அளிக்கிறான். கண்ணன் திண்மையும் மென்மையும் ஒருங்கே அமைந்தவன்.

"மல்லாண்ட" கதை:
மதுராவில் கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணூரன் என்ற இரு மல்லர்கள் பலராம கிருஷ்ணர்களுடன் சண்டையிட்டு தோல்வியை தழுவினர்.

"என்றென்றும்" என்ற பொருள் தொனிக்கும்படி, பல ஆண்டுகள், பல ஆயிரம் ஆண்டுகள், பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் என்று ஆழ்வார் நீட்டிக் கொண்டே போகிறார்.

[திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்பெற்ற பின்னனி]


கீதையில் கிருஷ்ணன், "என்னை நாடி வரும் பக்தர்கள் நான்கு வகை பட்டவர்:
தன்னுடைய துன்பம் போக வேண்டி வருபவர் முதல் வகையினர். ஏதேனும் பொருள் வேண்டி வருபவர் இரண்டாம் வகையினர். ஞானத்தை வேண்டி வருபவர் மூன்றாம் வகையினர். கடைசி வகையினர் ஞானிகள். இவர்களுள் ஞானி எனக்கு பிரியமானவன். அவன் என்னில் ரமிக்கிறான், நானும் அவனில் ரமிக்கிறேன்." என்று சொல்கிறான்.
இதனை படிப்போர் இங்கு ஒரு இயல்பான க்ரமத்தை காணலாம். துன்பத்தில் உள்ளவன் அத்துன்பம் நீங்குவதையே முதற் குறிக்கோளாக கொள்வான். வாழ்வில் துன்பங்கள் இல்லாதவன், புலன்களின் மூலம் அனுபவிக்க முடிகின்ற இன்பங்களின் மீது விருப்பம் கொள்கிறான். எண்ணற்ற இன்பங்களை அநுபவித்த மனிதன் திடீரென ஒரு நாள் பெரும் சலிப்பை அடைகிறான். தன்னுடைய இருப்பு, மற்றும் இவ்வுலகத்தின் இருப்பு குறித்து அவனுக்கு பல கேள்விகள் எழுகின்றன. மன அமைதியை முற்றும் இழந்து, கேள்விகளுக்கான பதில் என்னவாக இருக்கும் என்று பல வகையிலும் தேட முயல்கிறான். இறுதியில் அவற்றிற்கான பதில்களை அறிய இறைவனின் துணையை நாடுகிறான். அவ்வாறு இறைவனை நாடுபவன், "ஜிக்ஞாசு" என்று அழைக்க படும் மூன்றாம் வகையை சேர்ந்த பக்தன்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில்களை பகவானின் அருளினால் உணர்ந்தவன் "ஞானி".

(பகவானின் செயல்கள் விசித்திரமானவை. ஆதலால் மேற் குறிப்பிட்ட க்ரமம், ஆர்வமிகு சிற்றறிவு பூர்வமான ஒரு பார்வையே தவிர பொதுவான விதிமுறையாக கொள்ள முடியாது. உதாரணமாக, பெரும் துன்பமே ஒருவனை உண்மையை அறிய ஆவல் கொள்ள செய்யலாம்.)
ஞானம் அடைந்தவர் சதா இறை உணர்வில் திளைக்கின்றனர். நிலையான இன்பம், பேரின்பம், துன்பத்தின் சாயலே இல்லாத இன்பம், முக்தி, மோக்ஷம் என்று இந்நிலைக்கு பல விதமான பெயர்களை கூறுவர். ஆக, சதா இன்பத்தையே நாடும் மனிதன், நிலை நில்லாத பல வகைப்பட்ட இன்பங்களை துய்த்த பின், இறுதியில் இறை அருளால் நிலையான இன்பத்தை எய்துகிறான். இந்த இறுதி நிலையை அடைய எண்ணற்ற உபாயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பக்தி மார்க்கம்.

பக்தி மார்க்கம், "இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை" என்பதை அடித் தளமாக உடையது. பகவான் ஒருவன் இருக்கிறான் என்று நம்பிய பிறகே அவனிடம் எதையாவது வேண்டுவது, அன்பு செலுத்துவது பற்றிய பேச்செல்லாம் எழுகிறது. மேலே கண்ணன் குறிப்பிட்ட நான்கு வகையினோரும் நம்பிக்கை உடையவர்கள். அதனாலேயே, "நான்கு வகை பக்தர்களும் உயர்ந்தோர்களே !" என்று கண்ணனே அறுதியிட்டு உரைக்கிறான். எதையாவது வேண்டுவது என்ற சாக்கில் இறைவனை அணுகும் பக்தன் நாளடைவில் பகவானை சொந்தம் கொண்டாட தொடங்குகிறான். தன்னுடைய தாயாகவோ, தந்தையாகவோ, குழந்தையாகவோ, நண்பனாகவோ, எஜமானனாகவோ, ஏதேனும் ஓர் உறவை பாவித்து மேலும் நெருக்கமாகிறான். இப்படி ஒரு பாவனை மூலம் செய்யப்படும் பக்தி "பாவ பக்தி" எனப்படும். "பாவம்", "மஹா பாவமாக" வளர்கிறது. மஹா பாவ பக்தி நாளடைவில் "ப்ரேம பக்தியாக" மிளிர்கிறது. ப்ரேம பக்தி தூய அன்பின் முதிர்ந்த நிலை. அங்கு எந்த விதமான எதிர்பார்ப்பும், வேண்டுதலும் இல்லை. ஆழ்வார்கள் அனைவரும் ப்ரேம பக்தியில் மூழ்கியவர்கள். இவ்வாறு பக்தியில் ஆழங்கால் பட்டதாலேயே "ஆழ்வார்" என பெயர் பெற்றனர்.

வில்லிபுத்தூர் ஆழ்வார், ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெருமாளிடம் பேரன்பு கொண்டவர்.
கோயில் பட்டரான இவர், தினமும் பெருமாளுக்கு அன்று மலர்ந்த மலர்களால் மாலை சாற்றி புஷ்ப கைங்கர்யம் புரிந்து வந்தார். அதனால் "மாலாகாரர்" என்றும் பெயர் பெற்றார். இவர் சித்தம் சதா மகாவிஷ்ணுவிடம் இருந்ததால் "விஷ்ணு சித்தர்" என்றும் பெயர் பெற்றார். இவர் கிருஷ்ணனிடம் யசோதை போல தாயன்பு கொண்டவர். இவருடைய பெண் ஆண்டாள்.

"பூலோக வைகுண்டம்" என்ற புகழ் பெற்ற ஸ்ரீரங்கம், திருமால் கோவில்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. அளவிட முடியாத சிறப்பினால் "பெரிய கோயில்" என்று அழைக்கப்படுகிறது . இங்கு பள்ளி கொள்ளும் கிருஷ்ணன், "பெரிய பெருமாள்" என்று அழைக்கப் பெறுகிறான். சாக்ஷாத் பெரிய பெருமாளுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அவருக்கு மாமனார் ஆனதால் வில்லிபுத்தூரார் "பெரிய ஆழ்வார்" என்று அழைக்கப் பெறுகிறார்.

பெரியாழ்வார் அருளிய பாசுரங்களின் எண்ணிக்கை 473. நாலாயிரத்தை தொகுத்த நாதமுனிகள் பெரியாழ்வாரின் பாசுரங்களுக்கு முதன்மை அளித்து அவற்றை முதலாவதாக வைக்கிறார். இந்த 473 பாசுரங்களுள் முதன்மையானதாக விளங்குவது "திருப்பல்லாண்டு" என்று அழைக்கப்படும் 12 பாசுரங்கள். திவ்ய பிரபந்தம் "தமிழ் வேதம்" என்று போற்றப் பெறுகிறது. வேதத்திற்கு முதன்மையானதாகவும் மங்கள ஒலியாகவும் "ஓம்" என்ற மந்திரம் விளங்குவது போல் பிரபந்தத்திற்கு பல்லாண்டு பாசுரங்கள் திகழ்கின்றன என்பது முன்னோர்கள் மொழி.

பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில் மதுரையை தலை நகராக கொண்டு வல்லபத்தேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் ஒரு நாள் இரவு நகர் வலம் வரும் வேலையில் ஒரு யாத்ரீகரை சந்திக்க நேர்ந்தது. அவர் எதனால் அந்த வயதான காலத்திலும் மிகவும் சிரமப்பட்டு யாத்திரை மேற்கொள்கிறார் என்று அறிய எண்ணிய மன்னன் அவருடன் உரையாடலில் ஈடுபடுகிறான். அந்த யாத்ரீகர், "இரவிற்கு தேவையானதை பகலிலும், மழை காலத்துக்கு தேவையானதை வெயில் காலத்திலும் மறுமைக்கு தேவையானதை இம்மையிலும் தேட வேண்டும் !" என்ற அறிவுரையை மன்னனுக்கு வழங்குகிறார். இது அவனை மிகவும் சிந்திக்க வைக்கிறது. மறுமை - அதாவது இறந்த பின் உள்ள காலம் - அது எவ்வாறு இருக்கும், அப்பொழுது நமக்கு என்ன தேவை இருக்கும், அதற்கு இம்மையில் செய்ய வேண்டுவது யாது முதலான பல கேள்விகள் அவனுடைய சிந்தையில் உதயமாகின்றன. அரசனுடைய அமைச்சராக செல்வநம்பி என்ற பெயர் கொண்ட பெரியாழ்வாரின் நண்பர் பணி புரிந்து வந்தார். அவர் அரசனுடைய கவலை, இறை தத்துவத்தை நன்றாக அறிந்த, பகவத் அனுபவம் உள்ள ஒருவரால் தான் தீர்க்க முடியும் என்று நினைத்து, "பர தத்துவ நிர்ணயம் " செய்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று சொன்னார். (பரம் - உயர்ந்தது ) அதாவது, இம்மையிலும் மறுமையிலும் நலம் பயக்கும் உயர்ந்த விஷயம் எது? எதை செய்தால் அதனை அடையலாம்? என்று நிரூபணம் செய்ய வேண்டும். அரசன் நாட்டில் உள்ள மதத் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தான். செல்வநம்பி பெரியாழ்வாருக்கும் அழைப்பு கிடைக்குமாறு கவனித்து கொள்கிறார். பல் வேறு மதத் தலைவர்களும் கூடிய சபையில் அரசன் ஒரு பொற்கிழியை உயரமாக கட்டி, "யாருடைய வாக்கு மெய்மையானதோ அதற்கு கட்டுப்பட்டு இந்த பொற்கிழி தாழும். பொற்கிழி அவர்க்கு உரிமை உடையதாகும் !" என்று அறிவிக்கிறான். சபையில் கூடி இருந்தவர் அனைவரும் பேசி முடித்த அளவிலே பெரியாழ்வார் பேச ஆரம்பித்து, ஸ்ரீமந் நாராயணன் தான் பரம்பொருள் என்று அழகாக அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எடுத்து உரைக்க, அவ்வளவிலே அது வரை தாழாத பொற்கிழி அவரை நோக்கி தாழ்ந்தது. சபையில் கூடியிருந்த அனைவரும் கரகோஷிக்க, அரசன் மிகவும் மகிழ்ந்து பெரியாழ்வாருக்கு சகல விதமான மரியாதைகளையும் செய்து பட்டத்து யானையின் மேல் ஏற்றி நகர் வலம் வர செய்கிறான். அப்பொழுது, விளையாட்டு போட்டியில் பரிசு பெற்று திரும்பும் பிள்ளையை நோக்கி பரிவுடன் வரும் பெற்றோர் போல பெருமாளும் பிராட்டியும் கருடன் மேலேறி ஆழ்வாரை நோக்கி வருகிறார்கள். அந்த திவ்ய காட்சியை கண்ட ஆழ்வார், அதன் அழகில் மயங்கி, உள்ளத்தில் அன்பும் பரிவும் பொங்க பாடும் பாசுரங்களே இந்த "திருப்பல்லாண்டு" பாசுரங்கள்.

No comments: