கடவுள் வாழ்த்துப் பாசுரங்கள் - 4பெரியாழ்வார் திருமொழி - 4

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து*
கூடு மனம் உடையீர்கள்
வரம்பொழி வந்து ஒல்லை கூடுமினோ*
நாடு நகரமும் நன்கு அறிய
"நமோ நாராயணா" என்று*
பாடு மனம் உடை பத்தருள்ளீர்! வந்து
பல்லாண்டு கூறுமினே.

[விளக்கம்]
இறை அனுபவம் வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களே! இன்னமும் உங்களை ஒரு வரம்பிற்குள் கட்டி போட்டு கொள்ள வேண்டாம். விரைவாக வாருங்கள் ! நாடு நகரம் எல்லாம் அறியும் வண்ணம் "நமோ நாராயணா" என்று பாடும் மனம் உடைய பக்தர்கள் நீங்கள் என்றால், காலம் தாழ்த்தாமல் விரைவாக வந்து எங்கள் குழுவில் கூடி பகவானுக்கு பல்லாண்டு பாடுங்கள்.

(சொற்பொருள்)
ஏடு - உடல்
ஒல்லை - விரைவு; வேகம்
பத்தர் - பக்தர்

[கூடுதல் விளக்கம்]
"ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்" - உயிர் நீங்கி உடல் பூமிக்கு இரையாவதற்கு முன்னம்.
மிகவும் வயதான காலத்தில், இன்னும் சில வருடங்களோ நாட்களோ மட்டுமே உள்ள அளவில்;
அந்த அளவில் நாம் இறைவனுடய அடியார் ஆகி கொள்ளலாம் என்று என்னும் பக்தர்களை நோக்கி அமைந்துள்ள பாசுரம்.
இறை நம்பிக்கை உடைய பக்தர்கள் பலர், தங்களுடைய மனதில் இறைவனின் புகழை பாடி பரவ வேண்டும் என்ற விருப்பம் உடையவர் ஆக இருந்தாலும், பகவத் அனுபவம் பெறுவதற்கு தகுந்த காலம் இதுவல்ல என்று தாங்களே முடிவு செய்வதுண்டு. பல விதமான வரம்புகளையும் இட்டுக் கொள்வதுண்டு. "இந்த வேலையை முடித்து விட்டு பின்னர் கோயிலுக்கு செல்வோம்; வயதான பிறகு இறைவனிடம் செல்வோம்; இப்பொழுது என்ன அவசரம்?" என்று நினைக்கும் பக்தர்களை இப்பொழுதே இறை அனுபவம் பெறுவதற்காக ஆழ்வார் அழைக்கிறார்.

மிகவும் இளம் வயதிலேயே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் செயலானது அன்று அலர்ந்த மலரை அவனுக்கு அர்ப்பணிப்பது போன்றது என்பது ஆன்றோர் மொழி.

"நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று" - பக்தர்கள் பகவானின் நாமங்களை பாட அச்சமோ வெட்கமோ படுவதில்லை என்பது குறிப்பு.


No comments: