அமலனாதிபிரான் - 5


அமலனாதிபிரான் - 5

பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோரமாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* திரு
வாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

[விளக்கம்]
மிகப் பெரிய உக்கிரமான தவம் செய்தேனோ என்னவோ !! பலப் பிறவிகளாக சேர்த்து வைத்திருந்த, எனக்கு பெரும் சுமையாக இருந்த வினைகளை எல்லாம் இந்த அரங்கன் வேருடன் களைந்தான். அதோடு நில்லாமல் என்னை தனக்கு அன்பு செய்ய வைத்தான். அதோடும் நில்லாமல் என் உள்ளத்தினுள்ளும் புகுந்தான். இன்று தன் அழகை எல்லாம் நான் பருகுமாறு காட்சி அளிக்கிறான். மங்களகரமான ஆரம் திகழும் (சொற்களால் விவரிக்க முடியாத) அவனுடைய மார்பழகு என்னை அடிமை செய்ததே ! (அந்த அழகிற்கே ஆட்பட்டு நான் அடிமையானேன்.)

[சொற்பொருள்]
பாரம் - சுமை
பற்று - பிடிப்பு
பழவினை பற்றறுத்து - பழமையான வினைகளின் பிடிப்பினைக் களைந்து
வாரம் - அன்பு; பக்ஷபாதம்;உரிமை
ஆரம் - அணிகலன்; பூ மாலை; சந்தனக் குழம்பு


[கூடுதல் விளக்கத்தைத் திறக்க இந்தச் சுட்டியைத் தட்டவும்]




[ஒப்புநோக்கு (மறைந்து உள்ளது)]




17 comments:

குமரன் (Kumaran) said...

ஒப்புநோக்கும் கூடுதல் விளக்கங்களும் எங்கே என்று கேட்க நினைத்தேன். அவை இடுகையில் தெரியவில்லை. ஆனால் 'Show Original Post'ன்னு பின்னூட்ட பக்கத்துல பாத்தா தெரியுது. அருமையா இருந்தது. நல்ல வேளை தவறவிடலை.

Radha said...

//ஒப்புநோக்கும் கூடுதல் விளக்கங்களும் எங்கே என்று கேட்க நினைத்தேன்.//
ஆஹா ! அவை இரண்டும் மறைந்து இருக்கின்றன. அவற்றை க்ளிக் செய்தால் விரியும்.
(அப்படி தங்களுக்கு விரியவில்லை எனில் தயவு செய்து நீங்கள் எந்த browser use பண்றீங்கன்னு சொல்லுங்க.)

//அருமையா இருந்தது. நல்ல வேளை தவறவிடலை.//
நன்றி. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரொம்ப அழகா வந்திருக்கு படமும் பதிவும்! படிக்காம, ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன் படத்தையும் பாட்டையும்...

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்தான் வைத்தான்!
வைத்ததன்றி என்னுள் புகுந்தான் புகுந்தான் புகுந்தான்! - பெருமானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படி தங்களுக்கு விரியவில்லை எனில் தயவு செய்து நீங்கள் எந்த browser use பண்றீங்கன்னு சொல்லுங்க.)//

"ஒப்பு நோக்கு"/"இந்தப் பாசுரமே போதும்" என்று சுட்டியைத் தட்டினாற் போல் விரியுது/சுருங்குது குமரன்!

ராதா...ஒப்பு நோக்கினை சின்ன எழுத்துருவில் வேண்டுமானால் கொடுத்து விடுங்கள்! குமரன் போன்ற மென்பொறியாளர்களே இதை மிஸ் செய்கிறார்கள் என்றால், மற்ற காதல் அன்பர்கள் தெரியாமல் மிஸ் செய்ய வாய்ப்புண்டு! "மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ" என்பதை எப்படி என்னால் தவறவிட முடியும்? முடியவே முடியாது! ப்ளீஸ்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாரமாய பழவினை பற்றறுத்து//

பழவினைக்குத் தான் பாரம் என்று சொல்லியாச்சே! - பாரம் அறுத்து...

பற்று அறுத்து என்னும் போது, இப்போது பற்றிக் கொள்ளும், இனி பற்றிக் கொள்ளப் போகும் பற்றும் அறுத்து...

பாரமாய பழவினை, பற்று அறுத்து = போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்! ரங்க மோகத் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பகவானுக்கு எல்லா கோயில்களையும் விட அவன் அடியார்களின் உள்ளமே மிகவும் உகப்பாக இருக்கிறது. பக்தர்கள் உள்ளமே அவன் உகந்து வாசம் செய்யும் கோயிலாம்//

ஆமாம்! ஆமாம்! அங்கே செய்ய முடியாத ஏகாந்தங்களை உள்ளக் கோயிலில் அல்லவா செய்ய முடியும்! :)
திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான் - திருமாலிருஞ் சோலைமலை பாசுரங்களுக்கு நன்றி ராதா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திரு ஆர மார்பு - அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.//

* திருமகள் ஆரத் தழுவும் மார்பு = திரு-ஆர-மார்பு!
* திருமகள் ஆரம் போல் விளங்கும் மார்பு! இன்றும் அந்த ஆரத்தைக் காணலாம்! = திரு-ஆர-மார்பு!
* திரு மறு(மச்சம்) ஆர்ந்த மார்பு என்பதாலும் = திரு-ஆர-மார்பு!

மாயனார் "திரு-நண்-மார்பும்", மரகத உருவும் தோளும்
ஆயசீர் முடியும் தேசும் அடியோர்க்கு அகலலாமே!
திரு-நண்ணு மார்பு-ன்னு மூனு சுழி ண போட்டுப் பார்க்கும் சுகமே தனி! :)

இப்படி புருஷகார பூதையாய், ஆட்கொள்ள அவள் அங்கு இருப்பதால் தான்..இந்தப் பாசுரத்தில் மட்டும் "ஆட்கொண்டதே"-ன்னு பாடுகிறார்!

மற்ற ஒன்பது பாசுரத்திலும், "கவர்ந்ததுவே", "உலாகின்றதே", "சென்றதுவே", "ஒக்கின்றதே"-ன்னு பாடும் இவர்..."திரு-ஆர-மார்பு" என்பதால் "ஆட்கொண்டதே" என்று பாடுவதில் தான் எத்தனை லயிப்பு!

தத் வக்ஷ ஸ்தல ரசிகாம்,
பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!
வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம்
வந்தே ஜகன் மாதரம்!

திரு ஆர மார்பு - அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே!
திரு ஆர மார்பு - அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே!

குமரன் (Kumaran) said...

அவை தொடுப்புகள்/சுட்டிகள் என்று தெரியாததால் சொடுக்கிப் பார்க்கவில்லை. இப்போது சொடுக்கினால் விரிகின்றன. நன்றி.

Radha said...

நன்றி குமரன்.javascript பயன்படுத்தி ஒரு தற்காலிக முயற்சி செய்து பார்த்தேன். இதனை சற்றே மாற்றம் செய்ய வேண்டும் போல.

Radha said...

//ராதா...ஒப்பு நோக்கினை சின்ன எழுத்துருவில் வேண்டுமானால் கொடுத்து விடுங்கள்! //
ஆமாம் ரவி. இதற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டும்.

Radha said...

// படிக்காம, ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருந்தேன் படத்தையும் பாட்டையும்...//
இவ்வளவு ஆசை இருக்கறவங்க இருக்க வேண்டிய இடம் ஸ்ரீரங்கமாம். :-)

Radha said...

//மாயனார் "திரு-நண்-மார்பும்", மரகத உருவும் தோளும்...
திரு-நண்ணு மார்பு-ன்னு மூனு சுழி ண போட்டுப் பார்க்கும் சுகமே தனி! :) //
அடப்பாவி ! ஒரு நிமிஷம் தடுமாறி, நாம தான் பாசுரத்தை தப்பா தட்டச்சு செய்துட்டோமோன்னு திருத்தறதுக்கு போயிட்டேன். :-)

Radha said...

//தத் வக்ஷ ஸ்தல ரசிகாம்,
பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!
வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம்
வந்தே ஜகன் மாதரம்! //
இடையில ஒரு வரி விட்டு போனது பெருசு இல்ல. இருக்கற வரில ஒரு முக்கியமான பதம் விட்டு போயிடிச்சு.
தத்வக்ஷஸ் ஸ்தல "நித்ய" வாஸ ரஸிகாம். :-)

Radha said...

அரங்கா !! இந்த பதிவினை போலவே இனி வரும் பதிவுகள் அனைத்திலும் கண்ணபிரான் கேள்விகள் ஏதும் கேட்காம நல்ல பிள்ளையாய் இருக்க எனக்கு அருள் புரிவாய். :-))

Radha said...

//ரொம்ப அழகா வந்திருக்கு படமும் பதிவும்! //
நன்றி ! :-)

//திருமாலிருஞ் சோலைமலை பாசுரங்களுக்கு நன்றி ராதா! //
திருவாய்மொழியில் எதை தொட்டாலும் இனிக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாசுரங்களுள் இவை அடக்கம்.
நிற்க, ஒப்புநோக்கு பகுதியில் வேறு சில ஆழ்வார்களை விட்டிருக்க வாய்ப்புண்டு.
"வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய்" என்று திருமங்கை ஆழ்வார் பாசுரம் ஒன்று கூட இருக்கிறது என நினைக்கிறன். நேரம் கிடைக்காமையால் தேடவில்லை.
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
படத்தையும் பாட்டையும்...//
இவ்வளவு ஆசை இருக்கறவங்க இருக்க வேண்டிய இடம் ஸ்ரீரங்கமாம். :-)//

ஓ! அங்கிட்டு தான் இருக்கேன்! :)
மனவரங்கத்து நம்பெருமாளை ஏளப் பண்ணிப் பார்க்கணுமே!
சங்கர மனத்தில் சதிராட, அஸ்வ கதி காட்டும் நம்பெருமாள் பராக்..எச்சரிகை! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Radha said...
//மாயனார் "திரு-நண்-மார்பும்", மரகத உருவும் தோளும்...
திரு-நண்ணு மார்பு-ன்னு மூனு சுழி ண போட்டுப் பார்க்கும் சுகமே தனி! :) //

அடப்பாவி ! ஒரு நிமிஷம் தடுமாறி, நாம தான் பாசுரத்தை தப்பா தட்டச்சு செய்துட்டோமோன்னு திருத்தறதுக்கு போயிட்டேன். :-)//

அடியேன் டகால்ட்டி மகாத்மியம்! :))
நீங்களே சொல்லுங்க ராதா, "திரு-நண்-மார்பு" எவ்ளோ அழகா இருக்கு?