Showing posts with label திருப்பதி. Show all posts
Showing posts with label திருப்பதி. Show all posts

அமலனாதிபிரான் - 3


அமலனாதிபிரான் - 3

மந்தி பாய் வடவேங்கட மாமலை*
வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து
அரவின் அணையான்*
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல்
அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !


[விளக்கம்]
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கு திசையில் உள்ள வேங்கட மலையில் நின்று அருள் புரியும் வேங்கடநாதனே அரங்க நகருள் ஆதிசேஷன் என்னும் படுக்கை மீது அரங்கனாக கிடக்கிறான். இந்த அரங்கன்(வேங்கடநாதன்) வானில் வாழ்பவரும் வந்து வணங்கும் பெருமை மிக்கவன். முன்பு இவனுடைய அழகிய வயிற்றில் இருந்து 'படைக்கும் கடவுளான பிரமன்' படைக்கப் பெற்றான். இன்று அந்த எழில் வயிற்றில், செவ்வானம் போன்ற நிறத்து ஆடையை அணிந்து கொண்டு, என் இன்னுயிர் அரங்கன் திகழும் அழகே அழகு !! இந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போகிறதே !! (இந்த அழகிற்கே நான் அடிமையானேன்.)

(சொற்பொருள்)
அயன் - பிரம்மா
மந்தி - குரங்கு
சந்தி - வணக்கம்
அந்தி - செவ்வானம்
உந்தி - வயிறு
அரவு - நாகம் (ஆதிசேஷன்)

[கூடுதல் விளக்கம்]
(மந்தி பாய் வடவேங்கட மாமலை) - குரங்குகள் பாய்ந்து விளையாடும் பெருமை மிக்க திருவேங்கட மலை.

அமலனாதிபிரான் -1




அமலனாதிபிரான் - 1

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.

[விளக்கம்]
(நறுமணம் கமழும் சோலைகளை உடைய) திருவேங்கட மலையின் நாதன் மிக தொன்மையான தெய்வமும், குற்றம் குறை ஒன்றும் இல்லாதவனும் ஆவான். அவன் வானில் வாழ்பவர்களுக்கு தலைவன். தூய்மையே வடிவானவன். அப்படிப்பட்ட வேங்கடநாதன் முன்னம் என்னை தன் அடியார்களுக்கு அன்பு செய்ய வைத்தான். (அடியார்களிடம் கொண்ட அன்பின் பலனாக) இன்று என் கண்களுக்குள் ஸ்ரீ ரங்கநாதனின் தாமரை பாதங்கள் தாமே வந்து வசிப்பது போல உள்ளதே !

(சொற்பொருள்)
விரை ஆர் பொழில் - பரிமளம் மிக்க சோலை
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
திருக் கமல பாதம் - பெருமை/மங்களம் பொருந்திய, தாமரை மலரினை போன்ற பாதம்

[கூடுதல் விளக்கம்]
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - இந்த பதங்களுக்கு வைணவ ஆசார்யர்கள் சில விசேஷ அர்த்தங்களை தந்துள்ளார்கள்.

அமலன் - பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்.

"நிமலன்......அரங்கத்தம்மான்" - வேங்கடநாதனின் பெருமை மொழிகள் அரங்கனுக்கும் பொருந்துகின்றன.
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமருள்ளும் தண்பொருப்புவேலை* - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
-பூதத்தாழ்வார்(இரண்டாம் திருவந்தாதி)

கேசவன் உள்ள இடங்கள்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான்* - எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான்* முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன்.
(பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி)